Published : 16 Nov 2021 09:31 PM
Last Updated : 16 Nov 2021 09:31 PM
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் ஒருவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை கோட்டை வாசல் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றினார். இவரது கணவர் உயிரிழந்த பின் தனது மகனுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் 2008 செப். 29-ல் தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டின் பீரோவில் இருந்து 67 கிராம் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தக் கொலையில் கைதான வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை உறுதி செய்யக்கோரி கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு விசாரித்து, இருவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்ய உத்தரவிட்டது.
25 ஆண்டு சிறை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (75). இவரது குடும்பத்தினருக்கும் இதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் (36) என்ற ஆண்டவர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக 16.2.2016-ல் கோவிந்தசாமி, அவரது மகள்கள் பேச்சித்தாய் மற்றும் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். முத்துராஜை ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முத்துராஜூக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது.
இந்த தண்டனையை உறுதி செய்யக்கோரி ஆலங்குளம் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு விசாரித்து, முத்துராஜூக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT