Last Updated : 17 Mar, 2016 10:43 AM

 

Published : 17 Mar 2016 10:43 AM
Last Updated : 17 Mar 2016 10:43 AM

லோக்-அதாலத்தில் புதிய அணுகுமுறை மூலம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் சாதனை

லோக்-அதாலத்தில் புதிய அணுகுமுறையைப் புகுத்தியதால், வழக்குகள் முடித்து இழப்பீடு வழங்குவதிலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதிலும் கடந்தாண்டு முதல் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

‘யாவருக்கும் நீதி பெற சமவாய்ப்பு’ என்ற தாரக மந்திரத் துடன் செயல்படும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், முக்கிய அங்கம் வகிப்பது சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு. ஏழைகள் மற்றும் தேவைப் படுவோருக்கு இலவச சட்ட உதவி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2003-ம் ஆண்டில் இருந்தும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 2004-ம் ஆண்டில் இருந்தும் மக்கள் நீதிமன்றம் (லோக்-அதாலத்) நடத்தப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழுத் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.சுதாகர் கொண்டு வந்த புதிய அணுகுமுறை, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

புதிய அணுகுமுறையின்படி, மோட்டார் வாகன விபத்து வழக் குகள், புரோநோட், அடமானம், சிறிய உரிமையியல் வழக்கு போன்றவற்றில் லோக்-அதாலத் மூலம் தீர்க்கக்கூடிய வழக்குகள் எவை என்று கண்டறிவதற்காக 6 ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளைக் கொண்ட குழுவை (Case Identifying Unit) உருவாக்கினார் நீதிபதி ஆர்.சுதாகர். லோக்-அதாலத்தில் தீர்க்கக்கூடிய வழக்குகளை ஏராள மாகக் கண்டறிந்து தெரிவித்தது இக்குழு.

அதன்பின்னர் 2015-ம் ஆண்டு நடந்த லோக்-அதாலத்தின்போது 2014-ம் ஆண்டைவிட ரூ.24 கோடியே 21 லட்சம் மதிப்புக்கு அதிக இழப்பீடு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகள் எண்ணிக் கையும் கணிசமாகக் குறைந்தது. உயர் நீதிமன்ற வரலாற்றில் இது முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

திவால் அறிவிப்பு கொடுத்த ஒருவர், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு 2014-ல் நடந்த லோக்-அதாலத் தில் நீதியரசர் ஆர்.சுதாகர் அமர்வில், ரூ.2 கோடியே 60 லட்சம் இழப்பீடுடன் முடித்து வைக்கப்பட்டது. அதுபோல அண்மையில் நடந்த லோக்-அதாலத்தில், 286 ஏக்கர் நில தாவா தொடர்பாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கும் (என்.எல்.சி) நில உரிமையாளர்களுக்கும் இடையேயான வழக்கு ரூ.35 கோடி இழப்பீடுடன் முடித்து வைக்கப் பட்டது. லோக்-அதாலத் வரலாற்றில் இவை முக்கிய நிகழ்வாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறியதாவது:-

லோக்-அதாலத் என்றால் கீழமை நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டும் தான் என்ற கருத்து நிலவுகிறது. அது அப்படியல்ல. உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு, குண்டர் சட்டம் மற்றும் வெளிநாட்டுப் பொருட்கள் கடத்தல் (காபிபோஸா) வழக்கில் கைதானவர்கள், குழந்தை, பெண், முதியோரைக் காணவில்லை போன்ற குடும்ப வழக்குகள், விசாரணைக் கைதிகள், சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோர் இலவசமாக ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உதவுகிறது.

2015-ல் மட்டும் 170 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உரிமையியல் வழக்குகளில் கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 24 மேல்முறையீடு வழக்குகளும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மேல்முறையீடு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவால் இலவசமாக தொடரப்பட்டுள்ளன.

மேலும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 40 வழக்குகளும், 72 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளும், சாதாரண முறையில் (Writ Petition) 110 வழக்குகளும், இடைக்கால உத்தரவை எதிர்த்து 90 சீராய்வு மனுக்களும் (ஜீவனாம்சம் போத வில்லை என கோரி தாக்கல் செய்யும் மனுக்கள் போன்றவை) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இதுபோல உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இலவசமாக சட்ட உதவி தேவைப்படுவோர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் (கேட் நம்பர் 6) உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தின் முதல் மாடியில் உள்ள உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவை நேரிலோ அல்லது 044-25342834 என்ற தொலைபேசியிலோ அல்லது 1800-425-2441 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு டீக்கா ராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x