Published : 16 Nov 2021 07:14 PM
Last Updated : 16 Nov 2021 07:14 PM
ஆளும் கட்சியான நம்மைப் பார்த்துதான் எதிரிகள் பயப்பட வேண்டும் என கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பேசினார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவின் செயற்குழுக் கூட்டம், காளப்பட்டி சாலையில் உள்ள, தனியார் அரங்கில் இன்று (16-ம் தேதி) நடந்தது. இக்கூட்டத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கோவை மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பின்னர், செந்தில்பாலாஜி பேசும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்ப மனுக்களை வரும் 19-ம் தேதி வரை அளிக்கலாம். தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதோ, அவர்கள் வெற்றி பெறும் வகையில் மற்றவர்கள் தேர்தல் பணி செய்ய வேண்டும். தேர்தல் பணியில் குளறுபடிகள் செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மாவட்டத்தில் 775 வார்டுகள் உள்ளன. 2,298 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திமுக சார்பில், ஒரு வாக்குச்சாவடிக்கு 12 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். இப்பொறுப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டவுடன் ஒருங்கிணைந்து, தங்களது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்திக்க வேண்டும். அவர்களது அரசு சார்ந்த கோரிக்கைகளையும் அப்போது கேட்டறிய வேண்டும். அவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
எதிரிகளைப் பார்த்து நாம் அச்சப்படக் கூடாது. நாம் ஆளும்கட்சி. நம்மைப் பார்த்துதான் எதிரிகள் அச்சப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து உழைக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் 22-ம் தேதி கோவைக்கு வரும் தமிழக முதல்வருக்கு, ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் பேசினார். இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோரிடம் கட்சி நிர்வாகிகள் மூலம் வழங்கினர். இக்கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.சேனாதிபதி, சண்முகசுந்தரம் எம்.பி., மாநில நிர்வாகிகள் மு.கண்ணப்பன், மகேந்திரன் உள்ளிட்டோரும், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT