Published : 16 Nov 2021 05:40 PM
Last Updated : 16 Nov 2021 05:40 PM
புதுச்சேரியில் ஆண்டு சராசரியை விட 663 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில், 61 ஏரிகள் நிரம்பியுள்ளன.
புதுச்சேரியில் ஆண்டின் சராசரி மழை அளவு 1,200 மி.மீ ஆகும். இந்நிலையில் இயல்பை விட நடப்பாண்டில் இதுவரை 1,863 மி.மீ. மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவான 1200 மி.மீட்டரை விட 663 மி.மீ. கூடுதலாகும். இவற்றில் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 496.20 மி.மீ. மழை பெய்துள்ளது.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் 1,728.60 மி.மீ. பெய்த மழையை விட நடப்பாண்டில் இதுவரை 134.4 மி.மீ. மழை கூடுதலாகப் பெய்துள்ளது. ஆண்டு சராசரியைத் தாண்டி கூடுதலாக மழை பெய்திருப்பதால் புதுச்சேரியின் 84 நீர்நிலைகளில் பெரிய ஏரியான ஊசுட்டேரி முழுக் கொள்ளளவான 3.50 மீட்டர் நிரம்பியுள்ளது.
இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி 3.40 மீட்டர் கொள்ளளவை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி இவ்விரு ஏரிகள் உட்பட மொத்தம் 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதுமட்டுமின்றி புதுச்சேரி பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்திருக்கிறது. மேலும் வரும் நாட்களில் மழைப்பொழிவு நீடிக்கும் நிலையில் நடப்பாண்டில் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் எனவும், அனைத்து நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், நடப்பாண்டில் குடிநீருக்கும், விவசாயப் பாசனத்துக்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் பிரச்சினை இருக்காது. இருப்பினும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, நிரம்பியுள்ள தண்ணீர் வெளியேறாத வகையில் பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT