Published : 16 Nov 2021 05:22 PM
Last Updated : 16 Nov 2021 05:22 PM
தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட முடியும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி, கடந்த 3 தினங்களாக அதே நிலையில் இருக்கிறது. ஆகையால், மேட்டூர் அணைக்குத் தண்ணீர் மேலும் வருமானால் அந்நீர் உரிய வழிகளில் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் ரூ.565.00 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.
ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையடையாத காரணத்தால் இன்றைய தினம் 5 குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. மேலும், இத்திட்டத்திற்கு இன்னும் நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அதுகுறித்து அதிகாரிகளை விரைவுபடுத்தி, நிலம் எடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவுகள் எட்டப்படவில்லை. எனவே, அணையின் நீர்மட்டத்தை ஒவ்வொரு அடி உயர்த்துவதற்கும் உச்ச நீதிமன்றத்தை அணுகித்தான் உயர்த்தியுள்ளோம். உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையை மூன்று கட்டங்களாக பலப்படுத்தச் சொன்னது.
1979-ல்தான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஆரம்பித்தது. அப்போது அணையின் நிலை மிக மோசமாக உள்ளது என்று பத்திரிகைகளில் எழுதினார்கள். அப்போதைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி.தாமஸ் மத்திய நீர்வளக் குழு பொறியாளர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்து அணை பலமாகவே இருக்கிறது. இதனால் யாரும் பயப்படத்தேவையில்லை என்றும், பூகம்பங்கள் ஏற்பட்டாலும் ஒன்றும் ஆகாது எனவும் அணையின் மீது நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
ஆனால், அங்கிருந்த அதிகாரிகளைத் திருவனந்தபுரத்திற்கு வாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று அதிகாரிகளிடம் 152 அடி தண்ணீரை 136 அடி வரை மட்டுமே தேக்கி வைத்துக்கொள்ளுங்கள் என்றும், மூன்று கட்டங்களாக இந்த அணையை பலப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களையும் வழங்கினார். அதில் இரண்டு கட்டங்களாக பலப்படுத்திய பிறகு 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் எனக் கூறினார். அதனடிப்படையில் இரண்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டது.
1979ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்தக் கூறிய பிறகு, 1989ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான நான்தான் பலப்படுத்தும் பணிகளைச் செய்து முடித்தேன். அப்பணிகளை முடித்தபிறகும் கூட கேரள மாநிலம் நீரைத் தேக்க ஒப்புக்கொள்ளவில்லை.
கேரள மாநிலத்தில் உள்ள பத்திரிகைகள் மற்றும் நிருபர்கள் 136 அடிக்கு மேல் நீர் தேக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தேக்கலாம் என்று கூறியது. இதற்கிடையில், கேரள மாநில அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் எத்தனை அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று மாநில அரசே தீர்மானிக்கும் என்று சட்டம் கொண்டுவந்தது.
கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையத்திற்குத் திட்ட அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும். அந்த திட்ட அறிக்கைக்கு அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அணை கட்ட முடியும்''.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT