Published : 16 Nov 2021 03:46 PM
Last Updated : 16 Nov 2021 03:46 PM
முதல்வர் ஸ்டாலினின் வெள்ள நிவாரண அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது என்று இந்தியக் கம்யூனின்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
“வடகிழக்குப் பருவமழை அதி தீவிரமாகி, கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வழக்கமான இயல்பு மழையைக் காட்டிலும் பல மடங்கு அதிக மழை பெய்ததாலும் தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும், அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் உயிரிழப்புகளைத் தடுத்துக் குறைத்துள்ளன. அதேசமயம் சென்னை பெருநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் வீடுகள் மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டதால் மக்கள் வாழ்க்கை நெருக்கடி அதிகரித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கூடுதலாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மூத்த அமைச்சர்களோடு முதலமைச்சரும், உயர் அதிகாரிகளும் களமிறங்கி நிவாரண நடவடிக்கைகளைச் செய்து வருவது வாழ்வை மீட்புக்கு நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, நிவாரணம் வழங்கப் பரிந்துரைகளைப் பெற்று, போர்க்கால வேகத்தில் உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது.
அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழுவின் அறிக்கையை இன்று (16.11.2021) பெற்றுக்கொண்ட முதல்வர் உடனடியாக நிவாரணங்கள் அறிவித்துள்ளார். அறுவடைக்குத் தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். (ஏக்கருக்கு ரூ.8,163 மட்டும்) இத்துடன் நடவு செய்து 15 நாட்களைத் தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6083 மதிப்புள்ள (ஏக்கருக்கு ரூ.2,483/) இடுபொருள் வழங்கப்படும், சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 300 கோடி நிதியொதுக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் நிவாரணம் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்பதுடன், அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகுப்பில் நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு, எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
தாளடி பயிர் நடவு முடிந்த நிலையில், வேர் பிடிப்புக்கு முன்னர் மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கியதால் அதன் வேர்கள் அழுகி, அதன் முளைப்புத் திறன் இறந்துவிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குவது மட்டும் போதாது. மேலும் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட பழைய தொகுப்பு வீடுகள் பல இடங்களில் வசிக்க முடியாத நிலைக்கு இடிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. இந்த வீடுகளைப் புதுப்பித்துக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நிவாரண அறிவிப்பில் இடம் பெறவில்லை என்பதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்க வேண்டும்”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT