Published : 09 Mar 2016 06:06 PM
Last Updated : 09 Mar 2016 06:06 PM

திமுக, அதிமுகவில் சீட் பெற சென்னையில் முகாமிட்டு காய்நகர்த்தும் கட்சியினர்: தொகுதிக்குள் அரசியல் பணிகள் சுணக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பலர் தேர்தலில் போட்டியிட சீட் பெறும் முயற்சியில் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கன்னியாகுமரி, சென்டிமென்ட் தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் வெற்றிபெறும் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து உள்ளதால், திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இத்தொகுதியை முக்கியமாக கருதுகின்றன.

கன்னியாகுமரி தொகுதி தொடங்கி, மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆறு தொகுதிகளிலும் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்த முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், தற்போது சென்னையில் முகாமிட்டு காய்நகர்த்தி வருகின்றனர்.

திமுகவில் தீவிர முயற்சி

திமுக சார்பில் நாகர்கோவில் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தீவிர முயற்சி செய்து வருகிறார். அதேசமயம் அக்கட்சியின் நகர செயலாளர் மகேஷ் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவியதால் இம்முறை சீட் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கனிமொழி ஆதரவில் முயற்சித்து வருகிறார். முன்னாள் எம்.பி. ஆஸ்டினும் இத்தொகுதியை கேட்டுள்ளார். சுரேஷ்ராஜன் கன்னியாகுமரி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளார். தாமரை பாரதி தொடங்கி கன்னியாகுமரி தொகுதிக்கும் திமுக சார்பில் ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர்.

பச்சைமால் முனைப்பு

இதேபோல் அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதிக்கு தளவாய்சுந்தரம், பச்சைமால், சந்தையடி பாலகிருஷ்ணன் என, ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களில் பலர் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர் பச்சைமால் குளச்சல் தொகுதியையாவது பெற்றுவிடுவது என முனைப்பு காட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கிள்ளியூர் தொகுதிக்கு சீட் கேட்டுள்ளனர். இருவருமே தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். நாகர்கோவில் தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க கேட்டு ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்னையில் தங்கியுள்ளனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், தொகுதிக்குள் அரசியல் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x