Published : 16 Nov 2021 08:28 AM
Last Updated : 16 Nov 2021 08:28 AM
சென்னை மற்றும் புறநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மழையானது இன்னும் 4, 5 நாட்களுக்கு தொடர வாய்ப்பிருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை (17.11.2021) மற்றும் நாளை மறுநாள் (18.11.2021) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய செய்தி தெரிவிக்கிறது.
மேலும் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு லேசான மழை முதல் கன மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பருவமழை, கன மழை ஆகியவற்றால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது; தண்ணீர் தேங்கியுள்ளது, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது, சுகாதாரப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது; சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப்புக்குள்ளானது; மொத்தத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதற்குள் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப்பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை முழுமையாக அகற்ற வேண்டும், சாலைப்போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளையும், குடிநீர் வழங்குவதில், கழிவுநீர் செல்வதில், மின் கம்பம், மரங்கள் சாய்ந்திருப்பதை சரி செய்வதில் உடனடி தீர்வு காண வேண்டும். இப்படி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்தால் தான் தொடர்ந்து பெய்ய இருக்கும் மழையில் இருந்து விவசாயிகளை, ஏழை, எளிய, சாதாரண, நடுத்தர மக்களை ஓரளவுக்காவது பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.
இல்லையென்றால் மழையின் தீவிரத்தை பொறுத்து பாதிப்பு இன்னும் அதிகமாகும். விவசாயிகளும், பொது மக்களும் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
எனவே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும், பொதுப்பணித்துறையும் முன்னேற்பாட்டோடு செயல்பட வேண்டும்.
குறிப்பாக தமிழக அரசு நெல் மூட்டைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள், நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம், கரையோர மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிகள் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் சென்னை மற்றும் புறநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மழையானது இன்னும் 4, 5 நாட்களுக்கு தொடர வாய்ப்பிருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT