Last Updated : 10 Mar, 2016 04:03 PM

 

Published : 10 Mar 2016 04:03 PM
Last Updated : 10 Mar 2016 04:03 PM

தூத்துக்குடியில் பிசான நெல் அறுவடைப் பணி தீவிரம்: விலை குறைவால் விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தேவைக்கு அதிகமாகவே பெய்தது. இதனால் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேரில் பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடை தொடக்கம்

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய தாமிரபரணி ஆற்று பாசனம் உள்ள வட்டாரங்களில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை அதிகமாக இருந்ததால் கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளிலும் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிசான நெல் அறுவடை பணிகள் தொடங்கி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன.

ஆட்கள் கிடைப்பதில்லை

அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி என்.வி. ராஜேந்திரபூபதி கூறும்போது, ‘கோரம்பள்ளம் குளம் பாசனத்தில் 800 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் நெல் ஒரே மாதிரி விளைச்சல் அடையவில்லை. இடையிடையே இன்னும் மகசூலுக்கு வராத பயிர்களும் உள்ளன. இன்னும் சில நாட்களில் அறுவடை தீவிரமாகும்.

நெல் அறுவடை செய்ய இயந்திரத்துக்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1,800 வாடகை வசூலிக்கின்றனர். சாலையோரதில் உள்ள வயல்களில் மட்டுமே இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடிகிறது. இயந்திரம் செல்ல முடியாத வயல்களில் ஆட்களை கொண்டே அறுவடை நடைபெறுகிறது. ஆனால் ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகள்

அறுவடை செய்யும் நெல்லை வியாபாரிகள் களத்து மேட்டுக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு கோட்டை நெல் (140 கிலோ) ரூ.1,200-க்கு தான் விலை போகிறது. அரசு நிர்ணயித்த விலையை விட இது மிகவும் குறைவு. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. வியாபாரிகள் களத்து மேட்டுக்கே வந்து வாங்கி செல்வதால் குறைந்த விலை கிடைத்தாலும் பரவாயில்லை என விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்’ என்றார் அவர்.

விவசாயிகள் அலைக்கழிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள் கூறும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 20 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் இன்னும் திறக்கப்படவில்லை.

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு சென்றாலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்பது போன்ற காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதிகள் கிடையாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லை வாங்குவதில்லை.

ரூ.900 நஷ்டம்

இந்த காரணங்களால் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல், வியாபாரிகள், புரோக்கர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

மோட்டா ரக நெல் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,460, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,510 என, அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், வியாபாரிகள் ஒரு கோட்டை (140 கிலோ) ரூ.1,200 என்ற விலைக்கே விவசாயிகளிடம் வாங்கி வருகின்றனர். இது அரசு நிர்ணயித்த விலையை விட ரூ. 300 குறைவு. மேலும், எடை 40 கிலோ அதிகம். மொத்தத்தில் விவசாயிகளுக்கு ஒரு கோட்டைக்கு ரூ.900 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட வேண்டும். விவசாயிகளை அலைக்கழிக்கக்கூடாது.

கைவிடும் நிலை

வியாபாரிகள், புரோக்கர்கள் நெல்லை சேமித்து வைக்க உரிமம் பெற்றுள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் கோட்டை கணக்கில் நெல் வாங்குவதை தடுத்து கிலோ கணக்கில் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல் வியாபாரிகளை அழைத்து பேசி அரசு நிர்ணயித்த விலையில் நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

நெல் விவசாயம் என்பதே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாக மாறி வருகிறது. இதேநிலை நீடித்தால் விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிடும் நிலை உருவாகும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x