Published : 15 Nov 2021 05:05 PM
Last Updated : 15 Nov 2021 05:05 PM

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு; நிவாரண உதவி வழங்கினார்

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையை ஒட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (15.11.2021) ஒன்பதாவது நாளாகக் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், தோவாளை, கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள சுமார் 75 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தோவாளை வட்டம், தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், முதல்வர் ஆய்வு மாளிகையில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம், பறக்கின்காலைச் சேர்ந்த பாஸ்கரனின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வரின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெள்ள பாதிப்புகளைத் துரிதமாகச் சீர்செய்திடவும், நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரத்தைப் பேணிக் காத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை எவ்விதக் குறைபாடுமின்றி வழங்கிடவும், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களை முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மேலாங்கோட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாழைப் பயிர் பயிரிடப்பட்டுள்ள நிலங்களைத் தமிழக முதல்வர் பார்வையிட்டு, பயிர் சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இறுதியாகக் கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயிலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x