Published : 15 Nov 2021 12:31 PM
Last Updated : 15 Nov 2021 12:31 PM

பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி கூறிய மாணவி

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களைப் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அப்போது, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் விவசாயத் தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தானம், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னபாண்டியன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின்போது, கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது மாணவ-மாணவிகளைக் கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தி, பள்ளி மாணவி பி.சந்தோஷினி அளித்த வைரமுத்து கவிதைகள் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் மாணவியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்து பாடம் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அப்போது அந்த மாணவி, நீண்ட நாட்களாக நாங்கள் ஆன்லைனில் பாடம் கற்று வந்தோம். தற்போது பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடப்பதால் உற்சாகமாகப் படித்து வருகிறோம். பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x