Published : 10 Mar 2016 02:44 PM
Last Updated : 10 Mar 2016 02:44 PM

ரூ. 6 கோடியில் கட்டி பூட்டிக் கிடக்கும் கனரக வாகனக் காப்பகம்: திறப்புவிழா கண்டும் செயல்படாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு

மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட கனரக வாகனக் காப்பகம், திறப்புவிழா கண்டும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால், மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மதுரையில் வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திவைத்து, ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க வசதியில்லை. இதனால் ஆங்காங்கே நெடுஞ்சாலை, நான்குவழிச் சாலைகள் மற்றும் நகரச் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் வேகமாக வரும் பிற வாகனங்கள் இந்த வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் உள்ள சரக்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்துக்கு பின்புறம் ரூ. 6 கோடி மதிப்பில் கனரக வாகனங்கள் காப்பகத்தைக் கட்டியது. இங்கு 125-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவ தற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் தங்குமிடம், கழிப்பறை, சமையல் அறை, சாப்பிடும் இடம், பணி நிலையம், பணிப் பட்டறை மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதி களும் உள்ளன.

கனரக வாகனங்களை இங்கு நிறுத்து வதன் மூலம், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும், இதன்மூலம், ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அவசர கோலத்தில் சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட இந்த கனரக வாகனக் காப்பகம், தற்போது வரை செயல்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, திறப்பு விழாவுக்காக அவசரம் அவசரமாக பணிகள் நடைபெற்றன. இன்னும் கனரக வாகனங்கள் வந்து செல்வதற்காக சாலை கூட அமைக்கப்படவில்லை. மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் 20 முதல் 50 டன் வரை எடையுள்ள கனரக வாகனங்கள் வந்து சென்றால் டயர்கள் மண்ணுக்குள் பதிந்து மண் சாலை சேதமடைந்து விடும். அருகில் ஓடை செல்வதால், அந்த ஓடைக்குள் வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கு 12 மணி நேரம் வாடகை கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான வாடகைக் கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. வாடகை நிர்ணயித்து, மன்ற ஒப்புதல் பெற்ற பின்னரே, வாகனங்களை நிறுத்த முடியும். வாகனக் காப்பகத்தில் இருக்கும் வாகனங்களை 24 மணி நேரமும் பாதுகாக்க, பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால் இனி தேர்தல் முடிந்து மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே, இந்த கனரக வாகனக் காப்பகம் செயல்பட வாய்ப்புள்ளது என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்துள்ளது. இந்த வாகனக் காப்பகத்தை எடுத்த தனியாருக்கு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சி முன்பே திட்டமிட்டு செயல்பட்டு வாகனக் காப்பகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் பல லட்ச ரூபாய் இழப்பீட்டை தடுத்திருக்கலாம். தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் இன்னும் 3 மாதங்களுக்கு பிறகே வாகனக் காப்பகம் செயல்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது. இதனால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x