Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு துறை அதிகாரிகளின் கணக்கெடுப்பு அடிப்படையில், மழை வெள்ளத்தால் இதுவரை, 2,032 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை, மழை வெள்ளத்துக்கு இதுவரை 6 பேர்உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 78 முகாம்கள் அமைக்கப்பட்டு 145 சிறுவர்கள், 141 பெண்கள் மற்றும் 121 ஆண்கள் என மொத்தம் 407 பேர் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறையினர் செய்து வருகின்றனர்.
595 வீடுகள் சேதம்
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள்,ஓட்டு வீடுகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. 366 கூரை வீடுகள், 229 ஓட்டு வீடுகள் என மொத்தம் 595 வீடுகள் சேதமடைந்துள்ளன. பட்டியில் கட்டி வைக்கப்பட்ட மற்றும் மேய்ச்சலில் இருந்த 64 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும், நெல், மணிலா, கரும்பு, வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் சேதம் அதிகம் உள்ளது.
3,472 விவசாயிகள் பாதிப்பு
வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளின் கணக்கெடுப்புப்படி நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் 3,472 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது 2,032.15 ஹெக்டர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
முழுமையான கணக்கெடுப்பு தேவை
இந்நிலையில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால், விவசாய பெருமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணியை முழுமையாக நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூட விடுபடக் கூடாது. ஓர் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் ஏரிகள், அணைகளை தூர்வாரி, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT