Published : 14 Nov 2021 06:09 PM
Last Updated : 14 Nov 2021 06:09 PM
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார். புதுச்சேரியை மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக நடத்தவும், அடுத்த பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 1500 கோடி மத்திய உதவி தர கோரினார்.
திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை ஆகியோரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.
இக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து இல்லாத பிரச்சினையால், புதுச்சேரி அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவோ, சுற்றுலாவுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலைவாய்ப்புகளைஉருவாக்கவோ முடியவில்லை.புதுச்சேரியின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகத்தின் மத்திய உதவி முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 1500 கோடி மத்திய உதவி தேவைப்படுகிறது.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும், இதற்கு சுமார் 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை அளிக்கவேண்டும்.
தற்போதைய சட்டப்பேரவைக் கட்டிடம் முற்றிலும் போதுமானதாக இல்லாமல் பழமையானதாகவும் உள்ளது. இங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 300 கோடி ரூபாய் மானியம் தேவைப்படும்.
கரோனா தொடர்பான செலவினங்களுக்காகவும், மருத்துவமனைகளில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவது முற்றிலும் அவசியமானதால் ரூ. 500 கோடி நிதியுதவி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT