Last Updated : 14 Nov, 2021 05:35 PM

 

Published : 14 Nov 2021 05:35 PM
Last Updated : 14 Nov 2021 05:35 PM

குமரியில் நீடிக்கும் கனமழையால் தீவுகளாக மாறிய தாழ்வான பகுதிகள்; மின்சாரம் துண்டிப்பால் இருளில் பரிதவிக்கும் மக்கள்- மழை நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போன்று மாறியுள்ளன. மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் இருளில் பரிதவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 12 ஆம் தேதி மாலையில் இருந்து பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் தேங்கி வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் புயல், மற்றும் காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

நாகர்கோவில் மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் குளம் போல் காட்சியளிக்கிறது.
ஒழுகினசேரி, ஊட்டுவாழ்மடம், புத்தேரி, வடசேரி, ரயில்வே காலனி போன்ற பகுதிகளும், தேவாளை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குழித்துறை, நித்திரைவிளை, திருவட்டாறு, கிள்ளியூர், தடிக்காரன்கோணம், சுசீந்திரம் உட்பட 210 கிராமங்களுக்கு மேல் தனித்தீவுகளாக மாறியுள்ளன.

இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீரில் சூழ்ந்து மக்கள் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் இருந்து இன்று வரை 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. செண்பகராமன்புதூர், இறச்சகுளம், சுசீந்திரம் பகுதிகளில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒழுகினசேரி பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை குறைந்து சாரல் மட்டும் பொழிந்ததால் வெள்ளசீற்றம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் பழையாற்றை ஒட்டிய சுசீந்திரம், மற்றும் சுறு்றுப்புற பகுதி சாலையோரங்கள் எங்கும் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

மின்இணைப்பு துண்டிப்பு:

குமரியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவித்தனர்.மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 76 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் மேலும் 30 முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் உதவி கோர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாகர்கோவில், மற்றும் சுற்றுப்புற பகுதிகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்த மக்களை பேரிடர் மீட்பு படையினருடன் தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீஸார், மற்றும் தன்னார்வலர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். நேற்று வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள சேதத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு:

நாகர்கோவில், திருவனந்தபுரம் வழித்தடத்தில் பேயன்குழி, நுள்ளிவிளை போன்ற பகுதிகளில் ரயில் தண்டவாளத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆறுபோல் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. இதைப்போல் குழித்துறை, இரணியல் பகுதிகளில் மண் சரிவு றே்பட்டுள்ளது. இதனால் இன்றும் 2வது நாளாக திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைப்போல் நகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், குலசேகரம் என நகர, கிராம பகுதிகளில் உள்ள சாலைகள் 300க்கும் மேற்பட்டவை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து குமரி வரும் நெய்யாற்றின்கரை பகுதியில் ஆற்று பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

2 பேர் பலி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய மழைக்கு இருவர் பலியாகி உள்ளனர். பொய்கை அணையில் கடந்த 12ம் தேதி கனமழை நேரத்தில் குளித்த அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தண்ணீர் சுழலில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (64) என்ற காய்கறி வியாபாரி நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழைநீருடன் கலந்து வந்த காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்து சென்றது. அவரது உடல் இன்று காலை அங்குள்ள வயல்வெளியில் கிடந்தது.

மார்த்தாண்டம் அருகே மூலக்காவிளையை சேர்ந்த கிருஷ்ணமணி என்பவர் முல்லை ஆற்றில் கரை பகுதியில் நின்றபோது ஆற்றிற்குள் தவறி விழுந்தார். ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்ட அவரது நிலை என்ன ஆனது என தெரியவில்லை. 2வது நாளாகி அவரை தேடும் பணி நடந்தது.

அமைச்சர்கள் ஆய்வு:

நாகர்கோவிலில் இன்று அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைப்போல் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் போலீஸாருடன் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 219 மிமீ., மழை பெய்திருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x