Published : 14 Nov 2021 05:08 PM
Last Updated : 14 Nov 2021 05:08 PM

கன்னியாகுமரி மழை, வெள்ள பாதிப்பு; முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை: நாளை நேரில் ஆய்வு 

சென்னை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவு சூழ்ந்த வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக குமரியில் கடும் மழை பெய்து வருவதால் நினைத்துப் பார்க்கமுடியாத இழப்புகளை அம்மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் நூற்றைம்பது வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மழை விட்டுவிட்டு பெய்துவருவதால் ஆபத்து அதிகரிக்கும் என்ற நிலையே அங்கு உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை செய்துவருகிறார். நாளை அவர் குமரி மாவட்டத்தில் நேரில்சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சிப்பாறை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கிராமங்களை நோக்கி வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களை தங்க வைப்பதற்காக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இடுப்பளவு சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கநல்லூர், பரப்புவிளை, பருத்திக்கடவு, நெடும்புரம், மரப்பாலம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்போல வெள்ளநீர் இடுப்பளவு சூழ்ந்துள்ளது. இங்குள்ள சாலைகளில் தேங்கிய வெள்ளநீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

கலிங்கராஜபுரம், கோதேஸ்வரம் பகுதிகளில் இடுப்பளவு சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு வந்தனர். அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இங்கு கிராமங்களில் வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

சுசீந்திரம் அருகேயுள்ள கிராமங்கள் பலவற்றிலும் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்து ஏற்படும் நிலை. தொடர்மழை காரணமாக ஆசாரிபள்ளம் அருகேயுள்ள குளம் நீர் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளைநிலங்களில் நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காட்டாத்துறை அருகே பருத்திவாய்க்கால் என்ற இடத்தில் வெள்ளநீர் திடீரென பாய்ந்து வந்ததால் 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் வீடுகள் இருந்த தடமே தெரியவில்லை.

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மீனவர் படகுகளின் மூலம் மீனவர்ளும், காவல்துறையினரும் இதுவரை 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவு வரை தண்ணீர் ஆழமாக சூழ்ந்துள்ள நிலையில் காவலர்களும் மீனவர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு வருகின்றனர்.

சிலர் படகில் ஏறிவரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. தங்கள் கால்நடைகளை காப்பாற்றுவதற்காகவும், உயிரிழப்புகளுக்குப் பயந்தும் வீடுகளுக்குள்ளேயே அவர்கள் முடங்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு கன்னியாகுமரியைப் பொறுத்தவரை இந்த மாதிரி வெள்ளநீர் சூழும் அனுபவம் புதிதல்ல என்றும் தங்களுக்கு நீச்சல் தெரியும் என்றும் கூறி வீட்டைச்சூழ்ந்துள்ள வெள்ளநீரிலேயே சிக்கியுள்ளனர்.

அதேநேரம் வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்களிலும் பால், குடிநீர், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என அப்பகுதிக்கு செல்லும் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தேவையான அத்தியாவசிய உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முதல்வர் ஆலோசனை

கன்னியாகுமரியில் வெள்ளநீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் மக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதும் குறித்து தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பேரிடர் மேலாண்மைப் படைகளை மேலும் அங்கு அனுப்புவது குறித்தும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வதற்கான பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

குமரி பயணம்

கன்னியாகுமரிக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் மக்களை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து முதல்வர் நாளை குமரியில் வெள்ளநீர் பாதிப்புகளை கண்டறியவும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் நேரில் செல்ல உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x