Published : 14 Nov 2021 04:41 PM
Last Updated : 14 Nov 2021 04:41 PM
ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை. அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும். எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும்போது இன்று (14.11.2021) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி - தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறீர்கள், தொடர்ச்சியாக இன்றும் ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கிறீர்கள், தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்குகிறீர்கள், இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் - அது சம்பந்தமாக மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தலைமையில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியிருக்கிறோம். இன்று அல்லது நாளை அந்த அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள். அதன் பிறகு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் நிச்சயமாக செய்வோம்.
கேள்வி - கன்னியாகுமரிக்கு எப்போது செல்கிறீர்கள்?
பதில் - நாளை செல்வதற்கு முடிவு செய்திருக்கிறேன்.
கேள்வி - டெல்டாவில் பயிர்சேதம் அதிகமாயிருக்கிறது, பிரதமருக்கு இழப்பீடு கோரி கடிதம் எழுதுவீர்களா?
பதில் - மொத்த கணக்கீடு வந்தபின்பு அதையெல்லாம் தயார் செய்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு அனுப்பிவைப்போம். தேவைப்பட்டால், இங்கேயிருக்கின்ற அமைச்சர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
கேள்வி - படாளம், புளியந்தோப்பு பகுதிகளில் இன்னும் கழிவுநீர் தேங்கியிருக்கிறதே ...
பதில் - பழைய செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். தேங்கியது உண்மைதான். ஆனால் விரைவாக தேங்கிய நீரை அப்புறப்படுத்திவிட்டோம்.
கேள்வி - தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் - நான் அதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. அதற்காகத்தான் மக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், பெரிய வெற்றியை கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன், ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை. அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும். எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை இந்த மழைக்காலம் முடிந்ததற்குப் பிறகு அதற்கென கமிஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT