Published : 14 Nov 2021 03:23 PM
Last Updated : 14 Nov 2021 03:23 PM
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 10 இலட்சத்து 63 ஆயிரத்து 145 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பேசிய அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 50,000 இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 75 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை வார்டு-138, அம்பேத்கர் நகரில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர், அந்தப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ். மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்), திரு. விஷு மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), மாநகர நல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் 8வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்றைக்கு மாநிலம் முழுவதும் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 மெகா தடுப்பூசி முகாம்கள் 1,600 இடங்களில் நடைபெற்றது. இந்த முறை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 75 இலட்சம் அளவிற்கு இருக்கின்ற காரணத்தினால், 2,000 இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாநகராட்சியின் சார்பில் ஆணையாளர் அவர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 50,000 இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 75 லட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, கடந்த 2 ஆம் தேதியிலிருந்து வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று, நான்கு நாட்களாக நாளொன்றுக்கு சுமார் 3 இலட்சம் நபர்களுக்கு வீடுகளில் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 10 இலட்சத்து 63 ஆயிரத்து 145 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் மற்றும் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற காரணத்தினால், இலக்கை காட்டிலும் கூடுதலான தடுப்பூசிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 87 இலட்சத்து 88 ஆயிரத்து 518 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள், சேவைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பான 50,000 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT