Published : 14 Nov 2021 02:28 PM
Last Updated : 14 Nov 2021 02:28 PM

பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கி, நடைமுறைப்படுத்துக: மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடும் அறிக்கையில், "

கோவை மாநகரம் கோட்டைமேடு பகுதியை மாணவி பள்ளி ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சாந்த மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இம்மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதை, சக மாணவிகளிடம் கூறி, மாணவி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சனிடம் புகார் செய்தபோது அவர் ஆசிரியரை கண்டிப்பதற்குப் பதில் மாணவியைக் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது.
ஜனநாயக சக்திகளின் தீவிரமான போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை அந்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதுமின்றி மிதுன் சக்ரவர்த்தியின் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழிசுமத்தி அவரது மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தாக்குதல் குறித்து புகார் அளிக்க சுதந்திரமாக செயல்படும் குழுக்களை மாவட்டம் தோறும் நியமிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கல்வி கற்கும் உரிமை என்பதில் பள்ளிகளில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் முதன்மையானதாகும் என்று உச்ச நீதிமன்றம் அவினாஷ் மெஹ்ரோட்ரா வழக்கில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றப்பட மேலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரை அவர் உதாசீனப்படுத்தியதுடன் மாணவியைக் கண்டித்தும் உள்ளார்.

இத்தகைய சூழல்களை தவிர்ப்பதற்குத் தான் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தை உரிமைகள் குறித்த புலமையுடைய சமூக ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய விசாரணைக் குழுக்களைத் தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் அமைத்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க இரும்புக்கரத்துடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x