Published : 14 Nov 2021 02:33 PM
Last Updated : 14 Nov 2021 02:33 PM
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய தற்கொலைகளுக்கு காரணம் என வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 17வயது மாணவியின்பெற்றோர் கோவையில் சாதாரண சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பலகாரம் விற்றுவந்த மிகச் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாலியல் துன்புறுத்தலால் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி பெற்றோர் சார்பில் போராட்டம் நடந்தது.
பள்ளியின் முன்னாள் முதல்வர் கைதுசெய்யப்பட்ட நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதோடு மாணவியின் உடலையும் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட பள்ளியின் முன்னாள் முதல்வரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:'
பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.
அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்தப் பிரச்சினை, பள்ளி முதல்வரின் கவனத்திற்கு வந்தபோது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்கின்றது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
தற்போது இந்தியாவிலேயே ஆகக் கூடுதலாக, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன. அந்த அளவிற்கு அந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. என்றாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. பாலியல் கொடுமைகள் நிகழாத வண்ணம், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்; ஆறுதலாக இருக்க வேண்டும்.
மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அதுகுறித்தும், காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT