Published : 14 Nov 2021 12:21 PM
Last Updated : 14 Nov 2021 12:21 PM
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை, 41- வது தடவையாக எட்டி சாதனை படைத்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. இதனால்,,மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 9ம் தேதி 119 அடியை எட்டியது.
இதனிடையே டெல்டா மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்ததால், அங்கு வெள்ள பாதிப்பினை தடுக்க, மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டது. அணையிலிருந்து சீரான அளவில் காவிரியில், நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த சூழலில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை 12,236 கன அடியாக குறைந்தது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நேற்று காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி, மாலை 4 மணிக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் நேற்று இரவு 11. 35 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 41-வது தடவையாக, நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்தது.
இன்று காலை அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 24 ஆயிரம் கன அடி நீர் அணையின் சுரங்க மின் நிலையம் மற்றும் மின் நிலையம் வழியாக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணை நிரம்பி விட்டதைத் தொடர்ந்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாகவும் சிறிதளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பியதை அறிந்த சுற்றுவட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து மேட்டூர் அணையை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT