Last Updated : 14 Nov, 2021 12:04 PM

3  

Published : 14 Nov 2021 12:04 PM
Last Updated : 14 Nov 2021 12:04 PM

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த விவகாரம்: தலைமறைவாக இருந்த பள்ளியின் முன்னாள் முதல்வர்  கைது

கோவை

கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்புடைய பள்ளியின் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகரில் வசிக்கும் ஒரு தம்பதியர், அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பலகாரம் விற்று வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் பிளஸ் 1 வரை படித்த அவர், நடப்புக் கல்வியாண்டில் அப்பள்ளியில் இருந்து விலகி, வீட்டருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உக்கடம் போலீஸார், அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், அச்சிறுமி இதற்கு முன்னர் படித்து வந்த தனியார் பள்ளியில், இயற்பியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த மிதுன்சக்கரவர்த்தி (31) பாலியல் தொல்லை அளித்ததால், மனமுடைந்து மாணவி தற்கொலை செய்தது தெரிந்தது.

இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் பெற்றோரும்,‘‘ மகள் முன்பு படித்த தனியார் பள்ளியில் உள்ள இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து நாங்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நாங்கள் அப்பள்ளியில் இருந்து டி.சி பெற்று, வேறு பள்ளியில் மகளை சேர்த்தோம். ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மனமுடைந்த எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார்,’’ என்றனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில், மாநகரின் மேற்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸார்,இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மீது போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, அன்று இரவு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடார்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ பிரிவில் நேற்று வழக்குப்பதியப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவி, தனக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து முன்னரே புகார் அளித்தும், அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், மறைக்கும் வகையில் செயல்பட்டதால் இவ்வழக்குப்பதியப்பட்டது. இதையடுத்து மீரா ஜாக்சன் தலைமறைவானார்.

தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீஸாரின் விசாரணையில் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரிந்தது. தனிப்படை போலீஸார் அங்கு சென்று இன்று அதிகாலை மீரா ஜாக்சனை கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x