Published : 13 Nov 2021 05:35 PM
Last Updated : 13 Nov 2021 05:35 PM
தற்போது 493 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கேரளாவில் புதிதாகப் பரவியுள்ள நோவோ வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க எல்லைகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் பொதுமக்களுக்குத் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கப்பட்டன. இதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (13.11.2021) ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து நடமாடும் மருத்துவ வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தப் பொது சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 493 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,052 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் வளர்வதைத் தடுக்கும் வகையில் புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அபேட் மற்றும் பைரித்ரம் போன்ற கொசு ஒழிப்பு மருந்துகள் 1.50 லட்சம் லிட்டர் கையிருப்பில் உள்ளன.
கேரளாவில் புதிதாகப் பரவியுள்ள நோவோ வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க எல்லைகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT