Published : 13 Nov 2021 05:16 PM
Last Updated : 13 Nov 2021 05:16 PM
பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள், நாளை என்பதால் இ-சேவை மைய வாயில்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கிப் பாதுகாக்கவும், வருவாயை நிலைப்படுத்தும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2021-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளைக் கட்டாயமாகப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு சம்பா சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 பிரீமியம் தொகையை இம்மாதம் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அதனால் பல விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை. கடந்த இரு தினங்களாக மழைப் பொழிவு நின்ற சூழலில், வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று, அதன்பின் இ-சேவை மையங்களுக்குச் சென்று சிட்டா பெற்று ஆன்லைனில் பணம் செலுத்தச் செல்லும் விவசாயிகள், இ-சேவை மையங்களில் கூட்டமாக இருப்பதால் பலர் காப்பீடு செய்யக் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் விருத்தாச்சலம் பகுதியில் பல விவசாயிகள் காப்பீடு செலுத்துவதற்காக இ-சேவை மைய வாயில்களில் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, ”காப்பீடு செய்ய பல நாள் அவகாசம் இருந்தும், கடைசி நேரத்தில் விவசாயிகள் ஒரே நேரத்தில் காப்பீடு செய்ய முன்வந்தால் நாங்கள் என்ன செய்வது? மேலும் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு அவசியம் குறித்து அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT