Published : 13 Nov 2021 04:21 PM
Last Updated : 13 Nov 2021 04:21 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை வெள்ளம் 200 கிராமங்களைச் சூழ்ந்தது. 120க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
மாவட்டம் முழுவதும் 4 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமடைந்தது. இதனால் தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கன்னியாகுமரி முதல் நாகர்கோவில், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆறுகள் செல்லும் பாலம் பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேல்பகுதியைத் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் குமரி, திருநெல்வேலி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைப்போன்றே பொய்கை அணை மறுகால், செண்பகராமன்புதூர் பெரியகுளத்தில் ஏற்பட்ட உடைப்பு போன்றவற்றால் தோவாளை சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதைப்போன்றே ஊட்டுவாள்மடம், செண்பகராமன்புதூர், அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, இறச்சகுளம், திருப்பதிசாரம், பூதப்பாண்டி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, புரவச்சேரி, நாவல்காடு, அருமனை, திருவட்டாறு, குலசேகரம், மார்த்தாண்டம், சென்னிதோட்டம், முட்டைக்காடு, தேரூர், கொட்டாரம், வழுக்கம்பாறை உட்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை நீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் வசித்த மக்கள் வெளியே வரமுடியாமலும், வீடுகளில் தண்ணீர் புகுந்ததாலும் அச்சமடைந்ததுடன் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
அவர்களைக் குமரி தீயணைப்பு மீட்புத் துறையின் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் ரப்பர் படகு மூலம் சென்று மீட்டனர். தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கிராம இளைஞர்கள் மற்றும் போலீஸார் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைப் போன்றே நாகர்கோவில் ஒழுகினசேரி, பார்வதிபுரம், தோவாளை, சுசீந்திரம், ஆசாரிபள்ளம் அருகே தோப்பூர், மற்றும் தக்கலை, மார்த்தாண்டம், கிள்ளியூர், கருங்கல் மற்றும் கிராமப் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தனர். குலசேகரம், திருவட்டாறு, திற்பரப்புப் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், வாழை தோட்டங்கள் மழை நீரில் மூழ்கின. இதைப் போன்றே கும்பப்பூ சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட 4000 ஏக்கர் நெல் நாற்றங்கால்கள் மழை நீரில் மூழ்கின.
வில்லுக்குறி, கருங்கல், தக்கலை பகுதிகளில் வாழை தோட்டங்கள் குளம்போல் காட்சியளித்தன. நாகர்கோவிலை அடுத்த நுள்ளிவிளையில் ரயில் தண்டவாளத்தில் அணைகளின் உபரிநீர், மற்றும் மழைநீர் தேங்கி ஆறுபோல் ஓடின. இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில், திருவனந்தபுரம் தடத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
மழை காரணமாக ஓடு, பச்சை செங்கற்கள், மண்சுவரால் கட்டப்பட்ட 120க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மாவட்டத்தின் மழை சேதத்தைப் பார்வையிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆகியோர் மீட்பு நடவடிக்கை, மற்றும் நிவாரண ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர். இன்று பகல் முழுவதும் மழை பெய்துகொண்டே இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத மழை இரு நாட்களில் பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை நீர் ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 205 மி.மீ. மழை பெய்திருந்தது. கன்னிமாரில் 140 மி.மீ., களியலில் 102, பேச்சிப்பாறையில் 84, பெருஞ்சாணியில் 117, புத்தன் அணையில் 114, சிவலோகத்தில் 121, சுருளகோட்டில் 135, தக்கலையில் 134, பூதப்பாண்டியில் 70, சிற்றாறு ஒன்றில் 90, கொட்டாரத்தில் 87, குழித்துறையில் 95, மயிலாடியில் 74, நாகர்கோவிலில் 97, குளச்சலில் 45, இரணியலில் 98, பாலமோரில் 122, மாம்பழத்துறையாற்றில் 103, ஆரல்வாய்மொழியில் 70, அடையாமடையில் 80, குருந்தன்கோட்டில் 114, முள்ளங்கினாவிளையில் 81, முக்கடல் அணையில் 100, அப்பர் கோதையாற்றில் 82, லோயர் கோதையாற்றில் 98 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 100.48 மி.மீ., ஆக இருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவினர் அணைப் பகுதிகளிலேயே முகாமிட்டு உபரிநீரை வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அரசின் அனைத்துத் துறையினரும் நிவாரண முகாம், மற்றும் மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்ப்பு!
குமரியில் 40 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை என்பதால் மாவட்டம் முழுவதுமே எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரம் மரங்கள் அதிகம் நிறைந்த குமரி மாவட்டத்தில் லேசான மழையின்போதே காற்று வீசினால் சேதங்கள் அதிகரிப்பதுண்டு. ஆனால், தற்போது பெய்து வரும் தொடர் மழையின்போது சூறைக்காற்று, மற்றும் மிதமான காற்று ஏதும் இதுவரை இல்லை. இதனால் சாலையோர மரங்கள், மற்றும் பிற பகுதிகளில் உள்ள மரங்கள் பெருமளவில் சாய்ந்து பேரிடர்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதைப் போன்றே மின்கம்பங்கள், மின்கம்பிகளால் இடர்கள் ஏற்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT