Published : 13 Nov 2021 04:07 PM
Last Updated : 13 Nov 2021 04:07 PM
நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கித் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
’’கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாளை (14.11.2021) 8-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரை சுமார் 75 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்துள்ளனர். தமிழகத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சென்னையில் நாளை 2,000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் 72 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 33 சதவீத மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
முதல்வரின் அறிவுரையின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கித் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 7 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’’.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT