Published : 13 Nov 2021 02:52 PM
Last Updated : 13 Nov 2021 02:52 PM

ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியில் சுமார் 4,16,000 குளோரின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (13.11.2021) நடமாடும் மருத்துவ வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

''மழைக்காலங்களில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் இன்று (13.11.2021) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1500 நடமாடும் மருத்துவ முகாம்களும் அடங்கும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 400 முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை மாநகரில் இன்று நடமாடும் மருத்துவ முகாம்களுடன் சேர்ந்து 750 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் 38,704 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3,54,547 நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த முகாம்களில் இதுவரை 43,578 நபர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம்களிலேயே கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற அதிகபட்சமான மருத்துவ முகாம்கள் தற்பொழுதுதான் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப் புண் ஆகியவற்றிற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குடிசைப் பகுதிகளில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை கிலோ வீதம் வழங்கப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சுமார் 4,16,000 குளோரின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x