Published : 13 Nov 2021 09:58 AM
Last Updated : 13 Nov 2021 09:58 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (13-ம் தேதி), நாளை 14-ம் தேதி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2022 தேதியினை மைய நாளாகக்கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து நாளதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 30-ம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது.
இச்சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக இன்று (13-ம் தேதி), நாளை (14-ம் தேதி) மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற இருந்தது. சிறப்பு முகாமில் தங்கள் பெயரைச் சேர்க்க உரிய படிவத்தினைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்பதையும், பிழைகள் மற்றும் திருத்தங்கள் உள்ளதா என்பதையும், வேறு தொகுதிக்கு அல்லது ஒரே தொகுதிக்குள் முகவரி விட்டு முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்களும், தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அதற்கான படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து, முகாமிலோ அல்லது வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம்.
இன்று (13-ம் தேதி), நாளை 14-ம் தேதி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், கனமழை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (13.11.2021), ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) ஆகிய தேதிகளில் மண்டலம் 4, 5, 6, 8, 9, 10, 13 உட்பட் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.
சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி மேற்படி தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment