Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM

மூத்த அரசியல்வாதியும் எழுத்தாளருமான தஞ்சை அ.ராமமூர்த்தி காலமானார்

தஞ்சை ராமமூர்த்தி

தஞ்சாவூர்

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சை அ.ராமமூர்த்தி(87)உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

தஞ்சையார் என அனைவராலும்அழைக்கப்படும் இவர், காங்கிரஸில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,காமராஜர், இந்திராகாந்தி போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி,காமராஜ் காங்கிரஸ், ஜனதாதளம் போன்ற கட்சிகளிலும் பணியாற்றியவர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த ராமமூர்த்தி, பின்னர் சமூக மற்றும் தமிழ்ப் பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழ் அமைப்புகளில் முழுவீச்சில் செயல்பட்டு வந்தார்.

வயது மூப்பு காரணமாக உடல்நல குறைபாட்டால் ராமமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிர்இழந்தார். ராமமூர்த்திக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

இவரது உடல் தஞ்சாவூர் சீனிவாசபுரம் கிரி சாலையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்று (நவ.13) இறுதிச் சடங்கு நடத்தப்படவுள்ளது.

தஞ்சை ராமமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x