Published : 14 Mar 2016 02:44 PM
Last Updated : 14 Mar 2016 02:44 PM
குமரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளிலாவது அதிமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சித் தலைமை தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்து வரும் தீவிர விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதால் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு போதிய செல்வாக்கு இல்லை. அதிமுக பிற மாவட்டங்களில் அமோக வெற்றிபெற்ற நேரங்களில் கூட குமரி மாவட்டத்தில் இரு தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியது கிடையாது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது நான்கு தொகுதிகளையாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தலைமை உள்ளது. இதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தீவிர விசுவாசிகளுக்கு வாய்ப்பு
இத்தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்குகளைப் பெற கட்சிக்கு விசுவாசமான தொண்டர்களை முன்னிறுத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. தேர்தல் சீட்டுகளையும், எம்.எல்.ஏ., அமைச்சர் என பதவிகளை மட்டுமே குறிவைத்து காய்நகர்த்தி வரும் நிர்வாகிகளை இனம் கண்டு, அவர்கள் வகித்து வரும் கட்சிப் பொறுப்பை பறிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரம் கட்சிக்காக உழைத்து வரும் கடைக்கோடி தொண்டர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்க முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கெனவே குமரி அதிமுக குறித்து உளவுத்துறையின் அறிக்கை சென்றுவிட்டது.
நேர்காணல் நடைபெறாதது ஏன்?
இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுகவின் தொடக்க கால உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் இதற்கு முந்தைய தேர்தல் போல கிடைத்த தொகுதிகள் போதும் என்ற நிலையில் கட்சி தலைமை இருந்துவிடாது. சென்டிமென்ட் தொகுதியாக கருதப்படும் கன்னியாகுமரியில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவது உறுதி. இதேபோல் நாகர்கோவில், குளச்சல் தொகுதியும் அதிமுக கைப்பற்றும் வகையில், தகுதியான வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கூட்டணி அமைவதை பொறுத்து பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம் அமைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 4 தொகுதிகளிலாவது அதிமுகவை வெற்றிபெறச் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் குமரி அதிமுகவில் தேர்தலில போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இதுவரை நேர்காணல் நடைபெறவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட பின்பு, தொடக்க காலத்தில் இருந்தே கட்சியில் பொறுமையாகவும், நம்பிக்கையாகவும் இருந்த குமரி மாவட்டத்தின் மூத்த நிர்வாகிகளான தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோருக்கு தற்போது அதிமுக தலைமை முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அவர்களிடம் குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சிக்காக விசுவாசமாக உழைக்கும் தொண்டர்கள் குறித்த பெயர் பட்டியலை அதிமுக தலைமை பெற்றுள்ளது. தேர்தலுக்குள் குமரி அதிமுகவை பலப்படுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகள் நியமனம் இருக்கும்'' என்றார் அவர்.
கட்சி நிர்வாகிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சி தலைமையிடம் இருந்து கிடைத்த தகவல், குமரி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT