Published : 12 Nov 2021 09:10 PM
Last Updated : 12 Nov 2021 09:10 PM
புதுச்சேரி அருகே கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதுச்சேரி உழவர்கரை மேரி வீதியைச் சேர்ந்தவர் சுந்தரி (80). இவர் மூலகுளம் குண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்த நிலையில், சாலையோரம் ஒதுங்கி நின்றுள்ளார்.
அச்சமையம் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் சுந்தரி தவறி விழுந்தார். இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் காவல் நிலைய காவலர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார் இருவரும் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனே அங்கு கழிவுநீர் வாய்க்காலில் உயிருக்கு போரடியபடி கிடந்த மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.
தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். இதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கணவர், பிள்ளைகள் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் மூதாட்டி சுந்தரி வசித்து வருவது தெரியவந்தது. மேலும் கோட்டக்குப்பம் பகுதியில் தனது தங்கை வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் இருவரும் மூதாட்டியை ஆட்டோ ஒன்றில் ஏற்றிச் சென்று கோட்டக்குப்பத்தில் உள்ள தங்கையின் மகன் வீட்டில் ஒப்படைத்தனர். தற்போது அவர்களின் பராமரிப்பில் மூதாட்டி இருந்து வருகிறார். காவலர்களின் இச்செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் மூதாட்டியை உயிருடன் காப்பாற்றிய காவலர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT