Published : 12 Nov 2021 06:25 PM
Last Updated : 12 Nov 2021 06:25 PM
செல்லிப்பட்டு-பிள்ளையார்குப்பம் படுகை அணையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனப் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் பெரிய ஏரியான ஊசுடு ஏரிக்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஊசுடு ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (நவ.12) ஊசுடு ஏரி மற்றும் பிள்ளையார்குப்பம் அணைக்கட்டுப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கும், ஊசுடு ஏரியைப் பராமரிப்பதற்கும் அரசு எடுத்துவரும் முயற்சிகளைப் பொதுப்பணித்துறைச் செயலர் விக்கிரந் ராஜா எடுத்துரைத்தார். அப்போது, அதிக நீரைச் சேமிக்க ஊசுடு ஏரியைத் தூர்வாரித் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதி சாலைகளில் மின்விளக்கு வசதி வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
‘‘ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயமாக இருப்பதால் மற்ற நீர்நிலைகளைக் காட்டிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. தூர்வாருதல், படகு விடுதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இடையில் கரோனா காரணமாக சுற்றுலா மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படவில்லை. வருங்காலத்தில் நடைபாதைகள் அமைத்து ஊசுடு ஏரியைச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிள்ளையார்குப்பம் பகுதிக்குச் சென்ற துணைநிலை ஆளுநர் பிள்ளையார்குப்பம்-செல்லிப்பட்டு இடையே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியைப் பார்வையிட்டார். அந்த அணை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பிரெஞ்சுக் காலத்தில் 120 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை என்பதால் சில குறைகள் இருக்கின்றன. புதிய அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்கான திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீரின் அளவு அதிகமாக இருப்பதால் கோடைக் காலத்தில் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் தொலைநோக்குத் திட்டத்தோடு புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அதற்கான வரைபடத்தையும் பார்த்தேன். முதல்வருடன் கலந்தாலோசனை செய்து தடுப்பணையை விரைவாகக் கட்டுவதற்கான முடிவு எடுக்கப்படும்.
கரோனா அச்சம் விலகிய பிறகு புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதுச்சேரியை நல்ல சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் இருக்கிறது. முதல்வரைச் சந்திக்கும்போது, செல்லிப்பட்டு அணையை நான் நேரடியாக வந்து பார்த்ததனால், இந்த இடத்தின் தன்மை குறித்து எடுத்துச்சொல்லி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.
வரும் 14-ம் தேதி தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனாவை விரட்டினால்தான் தடுப்பணைக்கே நாம் யோசனை செய்ய முடியும். எனவே அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT