Last Updated : 12 Nov, 2021 02:48 PM

 

Published : 12 Nov 2021 02:48 PM
Last Updated : 12 Nov 2021 02:48 PM

தொடர் மழையால் தஞ்சையில் பாதிக்கப்பட்ட பயிர்கள்: சேத விவரங்களைக் கணக்கெடுத்த அமைச்சர்கள் குழு

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் மழை பாதிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆய்வுக் குழுவினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு, சேத விவரங்களை அமைச்சர்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்து கணக்கெடுத்தனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழையாகப் பெய்து வருகிறது. தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தண்ணீர் தேங்கி சம்பா, தாளடி இளம்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதனால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திடவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட இன்று காலை தஞ்சாவூருக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் குழுவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் மற்றும் வேளாண்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்வது, பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது, சாலைகளில் எங்காவது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்கும் பணியைத் துரிதப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதனையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு அமைச்சர்கள், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் எஸ்.விஜயகுமார் மற்றும் எம்.பி., எம்எல்ஏ.க்கள், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு பாதிப்பு விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்து சேத விவரங்களைக் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டனர்.

தொடர்ந்து மழையால் இடிந்து விழுந்த வீடுகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களைப் பார்வையிட்டு தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:

''தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார். அவரே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். முதல்வர் உத்தரவின்படி நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தோம்.

மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3,700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சேத விவரங்களைக் கணக்கு எடுத்துள்ளோம். அவற்றை முதல்வரிடம் அளிக்க உள்ளோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்கும் நடவடிக்கைகளை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்டுள்ளோம். மழை குறையும் பட்சத்தில் விரைவில் தண்ணீர் வடிந்துவிடும்''.

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பின்னர் திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x