Published : 12 Nov 2021 02:01 PM
Last Updated : 12 Nov 2021 02:01 PM
ஓசூரைச் சேர்ந்த பாவலருக்கு தமிழக அரசின் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூயதமிழ் பற்றாளர் விருதும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில், நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதனைப் பாராட்டி ஆண்டுதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஓசூரில் தமிழாசிரியராகப் பணியாற்றியவரும், 25 நூல்களுக்கு மேல் எழுதியவரும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவருமான பாவலர் கருமலைத் தமிழாழனாருக்கு 2020-ம் ஆண்டிற்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் விழா கடந்த 8-ம் தேதியன்று சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராசன் பங்கேற்று, பாவலர் கருமலைத் தமிழாழனுக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருதும், விருதுத் தொகையாக ரூ.25 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் செ.சரவணன் கலந்து கொண்டார்.
தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்று ஓசூர் நகருக்கு வருகை தந்த பாவலர் கருமலைத் தமிழாழனை, ஓசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் எல்லோராமணி, ஓசூர் தமிழ் வளர்ச்சி மன்றச் செயலாளர் சிவந்தி அருணாச்சலம், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT