Published : 12 Nov 2021 11:05 AM
Last Updated : 12 Nov 2021 11:05 AM

சென்னையில் இன்று ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே 

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கனமழை காரணமாக சென்னையில் இன்று ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு அருகே கரையைக் கடந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை மற்றும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் சாலை மற்றும் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனிடையே, மழை பாதிப்பு கருதி ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னை கோட்டத்தின் தடா - சூலூர்பேட்டையில் உள்ள பாலம் எண்.167-ல் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி தடா - சூலூர்பேட்டை பிரிவில் உள்ள மேல் மற்றும் கீழ் பாதைகள் 11.11.2021 இரவு 10 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ரயில் எண். 07238 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா சிறப்பு ரயில் சேவை 12 நவம்பர், 2021 இன்று ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் வண்டி எண். 07237 பித்ரகுண்டா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவையும் நவம்பர் 12, 2021 இன்று ரத்து செய்யப்படுகிறது.

ரயில் சேவைகளை திசை திருப்புதல்

இதேபோல் நேற்று புறப்பட்ட பெங்களூர் கண்டோன்மென்ட் - கவுகாத்தி சிறப்பு ரயில், திருவனந்தபுரம் சென்ட்ரல்- ஷாலிமார் சிறப்பு ரயில், பெரம்பூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டன.

இன்று 02433-02269 வண்டி எண் கொண்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில்கள் அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சிறப்பு ரயில் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா சிறப்பு ரயில் ஆகிய ரயில்களும் அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன''.

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x