Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுடன் விமான சேவை தொடர்பாக மத்திய அரசு தற்காலிக ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் மத்திய அரசு வெளிநாட்டு விமான சேவைகளுக்கு விதித்த தடை இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நாடுகளுடன் ஏர் டிரான்ஸ்போர்ட் பப்புள்ஸ் என்ற ஒப்பந்தத்தை ஆக.11-ம் தேதி செய்து கொண்டு தற்காலிக விமான போக்குவரத்து சேவைகளை நம் நாட்டின் விமான நிறுவனங்கள் மூலம் வழங்கி வருகிறது.
ஆனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதனால், வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவை மட்டுமே இந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள நாமக்கல்லைச் சேர்ந்த மென்பொறியாளர் மைதிலி கிருஷ்ணசாமி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வரவேண்டிய பயணிகள் எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் போன்ற பிற நாட்டு விமானங்கள் மூலம் துபாய், தோஹா, கொழும்பு வழியாக அதிக பயணக்கட்டணம் செலுத்தி ஊர் திரும்புகின்றனர்.
நடப்பு நவம்பர் மாதத்துக்கு சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கான விமான டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. டிசம்பர் மாதத்துக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை
மத்திய அரசு சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் தற்காலிக ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் இந்த வர்த்தகம் முழுவதும் பிறநாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்குச் செல்கிறது. இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் சிந்தாஷா கூறியது: கரோனா காலங்களில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அக்.31-ம் தேதி வரை திருச்சிக்கு வந்தவர்களில் 63,938 பேர் திரும்பிச் செல்லவில்லை. இதற்கு விமான சேவைகள் இல்லாததும் முக்கிய காரணமாகும். இது தமிழகத்தின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். இதனால் அன்னிய செலாவணி தடைபட்டுள்ளது.
தமிழர்களின் நலன் கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மூலமாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளிடம் பேசி இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக வலியுறுத்த வேண்டும் என்றார்.
தற்போது தான் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசுகள் இந்தியாவைசேர்ந்த சில குறிப்பிட்ட விசா வகையினரை நிபந்தனைகளுடன் அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை விரைவில் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.
எனவே, மத்திய அரசு சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் விமான சேவை தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் செய்து கொண்டு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே நாடு திரும்பிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
வந்தே பாரத் திட்டத்தில் நாட்டிலேயே திருச்சிக்கு மட்டும் அதிக அளவில் விமான சேவை வழங்கப்பட்டது. கடந்த அக்.31-ம் தேதி வரை சிங்கப்பூரிலிருந்து 54,366 பேர், மலேசியாவிலிருந்து 34,323 பேர் திருச்சிக்கு வந்துள்ளனர். இவர்களில் அக்.31 வரை சிங்கப்பூருக்கு 19,601 பேர், மலேசியாவுக்கு 5,150 பேர் மட்டும் திரும்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT