Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

ஆலை விபத்தில் ஒரு கையை இழந்தாலும் மனம் தளரவில்லை: சுயதொழில் செய்து சாதிக்கும் மாற்றுத்திறனாளி மண்பாண்ட கலைஞர்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகளை தயாரிக்கும் மதுரை பரவையைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் மாற்றுத் திறனாளி ஆர்.வேல்முருகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

தனியார் ஆலை விபத்தில் ஒரு கையை இழந்தாலும் மனம் தளராமல் சுயதொழில் தொடங்கி சாதனை புரிந்து வருகிறார் மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன்.

மதுரை, பரவையைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன் (35). இவருக்கு மனைவி, 3 வயதில் ஒரு மகன், 2 வயதில் மகள் உள்ளனர். இவர் தனியார் கல்லூரியில் பி.காம். படிக்கும்போது கோச்சடையில் உள்ள தனியார் ஆலையில் வேலை கிடைத்தது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

2011-ல் பணியில் இருந்த போது இயந்திரத்தில் வலது கை சிக்கி துண்டானது. இதனால் வேலையிழந்தவர் மனம் தளராமல் சிறு வயதில் கற்றுக்கொண்ட மண்பாண்டத் தொழிலை மேற்கொள்ள தொடங்கினார். தொடக்கத்தில் சற்று சிரமப்பட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து தற்போது ஓரளவு வருமானம் ஈட்டி வருகிறார்.

இது குறித்து மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன் கூறியதாவது: தனியார் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வலது கை துண்டானது. ஆலை நிர்வாகம் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் ஏமாற்றமே மிஞ்சியது. பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் மண்பாண்டம் தயாரித்து விற்கும் தொழிலை தொடங்கினேன். மண் பானைகள் மட்டுமின்றி சிறுவர்கள் சேமிக்கும் உண்டியல், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறேன். ஆடி மாதம் கஞ்சிக் கலயம், முளைப்பாரி ஓடுகள், தை மாதம் பொங்கல் பானைகள் எனப் பருவத்துக் கேற்றவாறு உற்பத்தி செய்வேன்.

தற்போது கார்த்திகை தீபத்திரு நாளையொட்டி விளக்குகள், அகல் விளக்குகள், கிளியாஞ்சட்டிகள் உற்பத்தி செய்கிறேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x