Published : 11 Nov 2021 12:56 PM
Last Updated : 11 Nov 2021 12:56 PM
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்குச் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய முதல்வர், ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைக் கண்டறியும் வகையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்திட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT