Published : 11 Nov 2021 09:00 AM
Last Updated : 11 Nov 2021 09:00 AM
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து தென் கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் பலத்த தரைக் காற்று மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மழையைப் பொறுத்த வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக் கூடும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூரில் கன மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. சோழவரத்தில் 22 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT