Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

மேட்டூர் அணையில் மீட்புப் பணி அலுவலர் ஆய்வு: தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

சேலம் மாவட்ட கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் ஏடிஜிபி அபய்குமார் சிங், மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார். உடன் சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி அபிநவ் உள்ளிட்டோர்.

சேலம்

சேலம் மாவட்ட கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் ஏடிஜிபி அபய்குமார் சிங், மேட்டூர்அணையில் நேற்று ஆய்வு செய்தார். இதனிடையே அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,656 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 20,263 கனஅடியாகவும் இருந்தது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 26 ஆயிரத்து 440 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 21 ஆயிரத்து 27 கனஅடியாகவும், மாலை 20,656 கனஅடியாகவும் குறைந்தது. நேற்று காலை உபரிநீர் வெளியேற்றம் விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 20,263 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. நீர்இருப்பு 91.88 டிஎம்சி-யாக உள்ளது. மேலும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் ஏடிஜிபி அபய்குமார் சிங் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 24 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மழையினால் எந்தப் பகுதியிலும் பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆய்வின்போது, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா,டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி அபிநவ், அணை செயற்பொறியாளர்தேவராஜன், உதவிப்பொறியாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x