Published : 10 Nov 2021 06:34 PM
Last Updated : 10 Nov 2021 06:34 PM
மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமைவாய்ந்த புதுமண்டபத்தில் உள்ள வியபாரிகளுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் புதுவணிக வளாகம் கட்டி கடைகள் ஒதுக்கிய நிலையில் அவர்கள் இன்னும் அங்கு செல்ல மறுப்பதால் கோயில் நிர்வாகம், புதுமண்டபத்தில் உள்ள கடைகளுக்கான மின் இணைப்பை இன்று ( நவ.. 10)அதிரடியாக துண்டித்தது. இது பாரம்பரியமாக 300 கடைகளில் வியாபாரம் செய்து வந்த புதுமண்டபம் வியாபாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பழமை வாய்ந்த புதுமண்டபம் உள்ளது. இந்த புதுமண்டபம் கட்டிடமும், அதில் அமைந்துள்ள அரிய வகை சிற்பகங்களும் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆனால், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், இந்த புதுமண்டபத்தை வணிக நோக்கில் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு வாடகைக்கு விட்டது. அதில், 300 கடைகள் செயல்பட்டன. மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், சதுர அடிக்க 40 ரூபாய் வாடகைக்கு கடைகளை வியாபாரிகளுகக்கு விட்டது.
தையல் கடைகள், புத்தககடைகள், பாத்திரக்கடைகள், மதுரையின் பாரம்பரிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் என்று ஒரு மினி மால் போல் செயல்பட்டு வந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள், இந்த புதுமண்டபத்தில் ஷாப்பிங் செய்து மதுரையின் பாரம்பரிய பொருட்களை வாங்கி செல்வார்கள்.
மதுரை சித்திரைத்திருவிழாவுக்கான கள்ளழகர் ஆடைகள், தண்ணீர் பீச்சியடிக்கும் பைகள் உள்ளிட்ட பல்வேறு வகை திருவிழா ஆடைகள் இந்த புதுமண்டபம் கடைகளில்தான் பாரம்பரியமாக செய்யப்பட்டு வந்தன. அதனால், இந்த புதுமண்டபம் வணிகத்தை தாண்டி மதுரையின் பாரம்பரிய அடையாளமாக கருதப்பட்டது.
இந்நிலையில் புதுமண்டபத்தில் உள்ள கட்டிடங்களின் சிறப்புகளையும், அதில் உள்ள சிற்பகலைகளையும் பாதுகாக்க அங்குள்ள வியாபாரிகளை வெளியேற்ற மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்து அறநிலையத்துறை மாநகராட்சியை கேட்டுக் கொண்டதால் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டபம் வியாபாரிகளுக்காக பிரத்தியேகமாக வணிக வளாகத்தை கட்டியது.
தற்போது குன்னத்தூர் சத்திரம் வணிக வளாகம் கட்டி திறக்கப்பட்டு அங்குள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் புதுமண்டபம் வியாபாரிகளுக்கு கடந்த மாதமே சதுர அடி 80 ரூபாய் வாடகைக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதுவரை புதுமண்டபத்தில் வியாபாரிகளை கடைககளை காலி செய்ய முன்வரவில்லை. அதனால், நேற்று மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அதிரடியாக புதுமண்டபத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தது. மின் இணைப்பை துண்டித்ததால் கடைகளை காலி செய்ய வேண்டிய நெருக்கடி வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தில் கேட்டபோது, ‘‘கடந்த அக்டோபர் மாதமே மாநகராட்சி குன்னத்தூர் சத்திரத்தில் கடைகளை புதுமண்டபம் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால், அவர்கள் அங்குள்ள கடைகளை இதுவரை ரேக் அமைத்து செல்வதற்கு சிறு முயற்சி கூட செய்யவில்லை. நாங்களும் தீபாவளிக்கு முன்பே புதுமண்டபத்தை காலி செய்ய அறிவுறுத்திவிட்டோம். தற்போது புதுமண்டபத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டிய இருக்கிறது. அதனால், வியாபாரிகளை புதுமண்டபத்தைவிட்டு காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் மின் இணைப்பை துண்டித்தோம், ’’ என்றனர்.
புதுமண்டபம் வியாபாரிகள் கூறுகையில், ‘‘நாங்கள் குன்னத்தூர் சத்திரம் செல்ல மறுக்கவில்லை. அதற்கான காலஅவகாசம் கேட்கிறோம். ஆனால், அதற்குள் மின் இணைப்பை துண்டிப்பது எந்த வகையில் நியாயம், ’’ என்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கும், வியாபாரிகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT