Published : 10 Nov 2021 05:24 PM
Last Updated : 10 Nov 2021 05:24 PM
கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை இன்று (நவ.10) தொடங்கியது.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்குப் பழநி சென்றடையும். பழநியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும்.
மதுரையில் இருந்து நாளை (நவ.11) முதல் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06480) காலை 10.10 மணிக்குப் பழநி வந்தடையும். பழநியில் இருந்து நாளை (நவ. 11) முதல் காலை 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06462) மதியம் 2 மணிக்குக் கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு, வாடிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவை- பழநி இடையே பயணக் கட்டணமாக ரூ.55, கோவை- மதுரை இடையே பயணக் கட்டணமாக ரூ.90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை செல்லும் ரயிலுக்கும் கோவை ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரிலேயே டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் அல்லது யுடிஎஸ் செயலியில் பெறலாம்.
யுடிஎஸ் (UTS) செயலியை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செல்போன்களில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் செல்போன் எண், அடையாள அட்டை விவரங்களைச் சமர்ப்பித்து பிரத்யேகக் கணக்கை உருவாக்கிகொண்டு பயணச்சீட்டு பெறலாம். முன்பதிவில்லா ரயில் என்பதால் ஆன்லைனில் டிக்கெட் பெற இயலாது. முதல் நாளில் இந்த ரயிலில் 49 பேர் பயணித்தனர்” என்று தெரிவித்தனர்.
கட்டண உயர்வுக்குக் கண்டனம்
கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறும்போது, "எனது தொடர் கோரிக்கையை ஏற்று கோவை- பழநி இடையேயான பயணிகள் ரயில் சேவை தொடங்குவதை வரவேற்கிறேன். அதேநேரத்தில், கோவை- பழநி இடையேயான பயண கட்டணத்தை ரூ.25-ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தி பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சுமையேற்றுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்று, முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT