Published : 10 Nov 2021 04:27 PM
Last Updated : 10 Nov 2021 04:27 PM
இந்திய தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து கடந்த 01.11.2021 அன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு வாக்காளரின் பெயரும் இந்த வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கப்பட்டு, அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வைத்து ஜனநாயகக் கடமை ஆற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.
எனவே, தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர் சேர்க்கை , முகவரி மாற்றம் ஆகியவற்றினை செய்ய வேண்டுபவர்கள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையதளத்திலோ சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெயரினை சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை https://www.nvsp.in என்ற முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள், தங்கள் பகுதி தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அல்லது வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெளியிட்ட பின்னரே அவரது பெயர் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவித்துள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2021க்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் வாய்ப்பை பயன்படுத்தி தேவையான திருத்தங்கள், பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது"
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT