Published : 10 Nov 2021 01:39 PM
Last Updated : 10 Nov 2021 01:39 PM
கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக புதன்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்தது. ஆனால் மாவட்டத்தில் இன்று காலை ஏழு மணி நிலவரப்படி அதிகபட்சமாக பேராவூரணியில் 195 மி.மீ., ஈச்சன்விடுதியில் 172 மி.மீ., தஞ்சாவூரில் 161 மி.மீ., பட்டுக்கோட்டையில் 153 மி.மீ., மதுக்கூரில் 145 மி.மீ. என பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 113.7 மி.மீ. மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 33 குடிசை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட 11 வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் சேதமடைந்தன.
இந்நிலையில் கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரின் வீட்டில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடுபாடுகளில் கௌதம் (28), இவரது மனைவி மற்றும் குழந்தை அனன்யா (4) சிக்கி பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இதில் சிகிச்சை பலனின்றி அனன்யா உயிரிழந்தார்.
மேலும், கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கனகராஜ் (37), சுந்தரி (32) காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT