Published : 10 Nov 2021 01:09 PM
Last Updated : 10 Nov 2021 01:09 PM
மூன்றாவது நாளாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 7-ம்தேதி பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வெள்ளப் பெருக்கை தடுக்க பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுபணித்துறை தரப்பில், “ வடக்கிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழை வழுவடையும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்படவில்லை. இதன் காரணமாக மூன்றாவது நாளாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
உதவி எண்கள்
மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், பருவமழை குறித்து கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெறவும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுபாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணும் செயல்பட்டு வருகிறது.
மேலும், 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்ற உதவி எண், மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக அதிக புகார்கள் வரும் என்பதால் 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரே நேரத்தில் 30 பேர் புகார் தெரிவிக்க முடியும்.
மேலும் 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 வாட்ஸ்அப் எண்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ்அப் எண்களில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்கியது, மரக்கிளை விழுந்தது மற்றும் இதர புகார்கள் குறித்து தெரிவிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT