Published : 10 Nov 2021 08:38 AM
Last Updated : 10 Nov 2021 08:38 AM

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம்

மழை காரணமாக கோவை, சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று (நவ.10) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர், பெரம்பலூர், மதுரை, அரியலூர், விழுப்புரம், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.10) மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருச்சி, கோவை,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.10) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11-ம் தேதி வடதமிழக கரையை நெருங்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ம் தேதி காலை வடதமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக 10-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அதேபோல 11-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. புதுவைக்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அதிகாரிகளும் 3 நாட்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின், பழனிசாமி ஆய்வு

இதனிடையே, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 3-வது நாளாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், மதுரவாயல், விருகம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். கொரட்டூர், போரூர் ஏரிகளை பார்வையிட்டு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார். பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தார். யானைக்கவுனி, ஆர்.கே.நகர், முல்லை நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x