Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

அதிமுக அரசு மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

திருவள்ளூர்

பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 4,996 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஏரிக்கு வரும் நீரின் அளவு, நீர் இருப்பு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, கரைகள் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் தெரிவித்ததாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவை விட, அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குடிமராமத்து இல்லை

கடந்த ஆட்சியில் எந்த இடத்திலும் குடிமராமத்து பணிகள் செய்யப்படவில்லை. அப்போதைய முதல்வர் பழனிசாமி 300 ஏரிகள் தூர்வாரப்படும் என தெரிவித்தார். அந்த 300 ஏரிகளின் விவரங்கள் குறித்து, சட்டப்பேரவை 10 முறை நான் கேட்டும் பதில் சொல்லவில்லை. ஆனால், திருப்பத்தூர் முதல் மதுராந்தகம் வரை 108 ஏரிகளை தூர்வார ஒரே ஒருவருக்கு டெண்டர் விட்டார்கள். அவர், அந்த ஏரிகளை பார்க்காமல் பில் பாஸ் பண்ணப்பட்டு தொகையை வாங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நீர்வளத் துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x