Published : 09 Nov 2021 05:49 PM
Last Updated : 09 Nov 2021 05:49 PM
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் வைகோ, திருமாவளவன், ஜோதிமணி போன்றவர்கள் எல்லாம் தமிழக அரசு செய்தது தவறு என்றுகூடக் கூறவில்லை என ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் அத்துமீறும் கேரள அரசைக் கண்டித்தும், அதற்குத் துணை போகும் திமுக அரசைக் கண்டித்தும் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் டி.கல்லுபட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் தலைமை வகித்தார். உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் கே.மாணிக்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா, மாநில ஜெ.பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘முல்லைப் பெரியாறு அணையிலே 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் அது வலுவாகவும் , பாதுகாப்பாகவும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் இருக்கும். அதற்கான பாதுகாப்புக் கட்டமைப்புகளுடன் கர்னல் ஜான் பென்னிகுயிக் இந்த அணையைக் கட்டி தென்தமிழகத்தின் ஜீவாதாரத்திற்கு ஆதாரமாக அர்ப்பணித்தார். ஆனால் கேரளா அரசு தொடர்ந்து 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கத் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வாதாடி 142 அடி நீரை தேக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். ஆனால், இன்று கேரளா அரசு தன்னிச்சையாக அத்துமீறி அக்டோபர் 29-ம் தேதி 138 அடியிலே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டது. அதைத் தட்டிக் கேட்டாமல் தென்தமிழக விவசாயிகளைத் திமுக வஞ்சித்துவிட்டது. தென் தமிழக விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.
ஆனால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசுதான் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள் என்று கேரளா தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு நியாயம் கற்பிக்கின்ற வகையிலே பேசி வருகிறார் ’’ என்று தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜன் செல்லப்பா பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. நீட் தேர்வையும் காங்கிரஸும் திமுகவும்தான் கொண்டு வந்தது. தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் தமிழக அரசு கோட்டை விட்டது. இப்படி மாநில உரிமைகளை எல்லாம் கோட்டைவிட்டு தற்போது மாநில உரிமை பற்றிப் பேசுகிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான நியாயத்தைப் பெற்றுத் தருவதாக, தேர்தல் வாக்குறுதி அளித்த மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன், இந்த விவகாரத்தைப் பற்றி ஒரு அறிக்கை கூட விடவில்லை. ஏனென்றால் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆள்கிறது. அதுமட்டுமல்லாது திருமாவளவன், ஜோதிமணி, வைகோ போன்றவர்கள் எல்லாம் தமிழக அரசு செய்தது தவறு என்றுகூடக் கூறவில்லை’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT