Last Updated : 09 Nov, 2021 04:38 PM

1  

Published : 09 Nov 2021 04:38 PM
Last Updated : 09 Nov 2021 04:38 PM

வாலிபர் மரணத்தில் மர்மம்: ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

மறைந்த சுரேஷ்குமார்

நாகர்கோவில்

ஆரல்வாய்மொழி அருகே வாலிபர் மரண சம்பவத்தில், காதல் பிரச்சினையில் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவக்கொலை செய்ததாக குற்றம்சாட்டி 2வது நாளாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அதே நேரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள தோவாளைபுதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(27). இவர் அழகியபாண்டியபுரம் அருகே காட்டுப்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை கல்லூரி படிக்கும்போதிலிருந்து 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது.

அப்போது சுரேஷ்குமார் பெண்ணுடன் இருக்கும் போட்டோக்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் வீட்டு தரப்பில் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுரேஷ்குமார், மற்றும் அவரது தரப்பு உறவினர்களையும் எஸ்.ஐ. ஜோசப்ராஜ் விசாரணைக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் சுரேஷ்குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றநிலையில், அவர் செல்லவில்லை. வெகுநேரமாக அவர் வராததால் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது சுரேஷ்குமார் காதலித்த பெண்ணின் வீட்டின் அருகே அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.

அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீஸார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சுரேஷ்குமார் தற்கொலை செய்யவில்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது கழுத்து, கால் பகுதியில் காயம் இருக்கிறது. அவரை காதல் பிரச்சினையில் வேறு ஜாதி என்பதால் கொடூரமாக தாக்கி வாயில் விஷம் ஊற்றி ஆணவக் கொலை செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது சகோதரர் சுமன் ஆனந்த் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள சுரேஷ்குமாரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தனர். 2வது நாளாகவும் இன்று போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், கொலை வழக்காக மாற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என உறவினர்கள் மேறுப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தும் விஷமாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரேஷ்குமாரை ஆணவகொலை செய்து விட்டதாக அவர் காதலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தோவாளைபுதூர், காட்டுப்புதூர் பகுதிகளில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் வெவ்வேறு கோணங்களில் பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x