Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

நிலக்கோட்டை விபத்தில் இருந்து பாடம் கற்பார்களா?- அதிவேகமாக பயணிக்கும் ‘பைக் ரைடர்’களால் ஏற்படும் உயிரிழப்புகள்: கவனத்தில் கொள்ள வேண்டிய பெற்றோர்கள், இளைஞர்கள்

திண்டுக்கல்

அதிவேகத் திறன் மிக்க பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில்ஒரு இளைஞர் தூக்கி வீசப்பட்டதில் மின்கம்பியில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சைஉறைய வைக்கும் இச்சம்பவத்துக்குப் பிறகாவது, ‘அதிவேக பைக் ரைடர்கள்’ தங்கள் பொறுப்பைஉணர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது என்று தொடங்கி போக்குவரத்து விதிமீறல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

அதிலும் சமீபகாலமாக இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக விலை உயர்ந்த அதிவேக திறன்மிக்க பைக்குகளால் தினந்தோறும் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த பைக்குகளை விரும்பி வாங்குபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இவர்களில் பலர் கம்ப்யூட்டர் கேமில் பைக் ஓட்டியவர்கள். அதை சாலையிலும் நிகழ்த்திக் காட்ட முற்பட்டு சாகசத்தில் ஈடுபட்டு இறுதியில் இன்னுயிரை இழக்கின்றனர்.

பைக் ரேஸ் என்ற பெயரில் சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று விபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றனர். ஒழுங்கான வரிசையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் இடையே திடீர் திடீரென வளைந்து நெளிந்துசென்று சக வாகன ஓட்டுநர்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற அதிவேக பைக் ரைடர்கள் ஏற்படுத்தும் விபத்தில் அவர்கள் மட்டுமின்றி, அதேசாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிரும் பறிபோகும் சூழல் ஏற்படுகிறது.

நிலக்கோட்டை விபத்து

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை பெருங்குடியைச் சேர்ந்த காமராஜ்(20), அஜித்கண்ணன் (20) உள்ளிட்ட 10 இளைஞர்கள், இரு சக்கர வாகனங்களில் தீபாவளி விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்குச் சுற்றுலாசென்றுள்ளனர். நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது ஒருவரைஒருவர் முந்தியபடி அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் காமராஜ், அஜித்கண்ணன் ஆகியோர் சென்ற பைக், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் காமராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். பைக்கின் பின்னால் உயரமான இருக்கையில் அமர்ந்துஇருந்த அஜித்கண்ணன், மோதியவேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் சாலையில் 20 அடிக்கு மேல் சென்ற மின்கம்பி மீது தொங்கி உயிரிழந்தார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இக்காட்சியை கண்ட அவர்களது நண்பர்களும், சாலையில் சென்ற சக பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

விதிகளை பின்பற்ற வேண்டும்

இச்சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை டிஎஸ்பி சுகுமார் கூறியதாவது: அதிவேகம், அஜாக்கிரதை தான் இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்துகிறது. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக செல்வதுடன், காதில் இயர்போனை மாட்டியபடி செல்கின்றனர். போலீஸார் ஆய்வின்போது இதுபோன்று செல்பவர்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், எச்சரித்தும், வழக்குகள் பதிவு செய்தும் வருகிறோம்.

எனினும், அவர்களாகவே பொறுப்பை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடித்தால்தான் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்று கூறினார்.

திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் கூறுகையில், ‘நிலக்கோட்டை விபத்து குறித்து ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பஉள்ளோம்.

விபத்தில் சிக்கியது அங்கீகரிக்கப்பட்ட வாகனம்தான். அளவான வேகத்தில் அதை பயன்படுத்த வேண்டும். இவர்கள் அதிவேகமாக சென்றால்தான் விபத்து நிகழ்ந்துள்ளது’ என்றார்.

பெற்றோர்களுக்கும் பொறுப்பு உண்டு

வத்தலகுண்டுவில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் டி.கயல்விழி கூறுகையில், “எனது குடும்ப நண்பரின் மகன் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தான். மகன் ஆசைப்பட்டானே என அதிவேகத் திறன்மிக்க பைக்கை அவனது பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். அவன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது உயிரிழந்தான். அந்த குடும்பத்தினர் அடைந்த துயரத்தை அருகில் இருந்து அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அப்போதிருந்து எனது பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கடமையாகவே செய்து வருகிறேன்.

அதிவேக இருசக்கர வாகனங்களை தங்கள் மகனுக்கு வாங்கித் தர பெற்றோர் சிலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் இருக்கும் ஆபத்தை அவர்கள் உணருவதில்லை. எனவே, பெற்றோர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற விபத்துகளைப் பார்த்தாவது பெற்றோர் தங்கள் மகனுக்கு அதிவேக பைக்குகளை வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x